புல்வெளி பூமி

Vignesh Marimuthu | September 11, 2021

ஒரு நீண்ட அகண்ட புல்வெளி. எவ்வளவு அகலம் என்றால் இந்த பூமி அளவிற்கு. மாலையும் இரவும் உறவாட எத்திக்கும் வெண்ணிற கால நிலை. வானத்தில் இரண்டு நீல நிற நிலவு. அந்த நிறத்தில் நான் நிலாவை பார்த்ததே இல்லை. இரண்டு நிலாக்கள் ஒன்றாகவும் பார்த்ததில்லை. என் கால் விரல்களை இறுக்கி அழுத்திக்கொண்டு அந்த புல்வெளியின் ஈரத்தை உணர நினைக்கிறேன். அப்போது என் முதுகுக்கு பின் சற்று தூரத்தில் அந்த குரல்.

“பிரபு… !!!”

சற்று தூரத்தில் ஆனால் என்னை மிரளவைக்கும் அளவிற்கு அருகில் அந்த குரல் கேட்டது. என் வலதுபுறத்தில் இதயம் துடிப்பது போன்ற ஒரு உணர்வு. அந்த புல்வெளி பூமியின் மறுதிசையில் ஒரு சின்ன ஒளிகீற்று. அங்கே Skrillex -ன் Kill Everybody ஒலித்து கொண்டு இருந்தது. இந்த பாடல் ஏன் இவ்வளவு பரிச்சயமாய் இருக்கிறது என்று நான் யோசிக்கிறேன்.

“பிரபு…ஏன் ஏதாது யோசிச்சுட்டே இருக்கிற??!!!”.

மீண்டும் அவள் குரல். நான் ஓட துவங்குகிறேன். அந்த புல்வெளி கொஞ்சம் கொஞ்சமாய் நெருப்பாய் எறிகிறது. அவள் குரல் என்னை துரத்த நான் Skrillex பாடலை நோக்கி ஓடுகிறேன். நான் வேகத்தை கூட்ட கூட்ட என் கால் நெருப்பில் பற்றி எறிகிறது . அவளின் குரல் கொஞ்சம் கொஞ்சமாய் மறைந்துகொண்டு இருக்க Skrillex பாடலின் ஒளி கூடிக்கொண்டே போனது. அந்த சின்ன ஒளி கீற்று பிரகாசமாய் எரிந்து என் கண் கூசிட சட்டென நான் விழித்துக்கொண்டேன்.

பயம் வந்து முகத்தை கைகளால் மூடிக்கொண்டு விரல் இடைவெளியில் பேய் படம் பார்க்கும் குழந்தை போல் என் அரை கண்ணாடி ஜன்னலின் ஓட்டை வழியாக சூரிய ஒளி என் முகத்தில் விழுந்து கொண்டு இருந்தது. அந்த உடைந்த கண்ணாடியில் இன்றும் என் ரத்தக்கறை படிந்து இருப்பதை பார்க்கிறேன். என் கரம் கொண்டு அந்த ஒளியை தடுக்க என் விரல் இடையில் அந்த ஜன்னல் கண்ணாடி கீறிய காயங்கள். எந்த இரவு அது நடந்தது என்று நினைவில்லை. ஆனால் அது அவள் இல்லாத ஓர் இரவு தான்.

I want to kill everybody in the world I want to eat your heart

போனில் ஒலித்து கொண்டு இருந்த Skrillex -ன் அலாரத்தை OFF செய்து விட்டு என் King Sized Bed -ல் படுத்தவாறு என் Marlboro வை தேடி எடுத்தேன். அந்த Marlboro டப்பாவின் கடைசி இரண்டு சிகரெட். இரண்டு சிகரெட் மட்டும் இருப்பது எப்போதுமே என்னை டிஸ்டர்ப் செய்யும். அதில் ஒரு சிகரெட் மட்டும் எடுத்துகொண்டு போர்வையை விலக்கி எழுந்தேன். நான் மட்டுமே இருக்கும் அந்த அறையின் ஒரு மூலையில் ஆளுயர கண்ணாடி. கைரேகை அழுக்கு படிந்த ஒரு கண்ணாடி. அதன் கீழ் உள்ள cupboard ஐ திறந்து ஒரு தீப்பெட்டியை எடுத்தேன். தீக்குச்சி உரசும் போது வரும் சத்தமும் அந்த தீப்புகையின் வாசமும் Lighter ஆல் குடுக்க முடிந்ததே இல்லை. அந்த கண்ணாடியின் வழியாக என்னை நான் பார்க்கிறேன். மெதுவாக என் இதழ் இடையில் சிகரெட்டை பற்றவைத்து உள்ளிழுக்க அந்த புகையிலை என்னை அவளிடம் இழுத்து சென்றது.

“நீ ஏன்டா அடிக்கடி கண்ணாடி பாத்து தம் அடிக்குற..??!!”

அதே ஆளுயர கண்ணாடி. கண்ணாடி முன் அரைநிர்வாணமாய் நான். என் விரல் இடையில் அதே Marlboro. அதே King Sized Bed. அந்த போர்வையின் உள்ளே முழுநிர்வாணமாய் அவள். கண்ணாடி வழியாக அவளை பார்க்கிறேன். போர்வையை கழுத்து வரை இழுத்து மறைத்து இருந்தாள். அந்த வெண்ணிற போர்வை எனக்கு எப்போதுமே பிடித்தது இல்லை. அந்த அறையின் சுவற்றில் இருந்த Skrillex போஸ்டர் -ம் பிடித்தது இல்லை. என்னையும் எனக்கு அவ்வளவாய் பிடித்ததில்லை. ஆனால் இவை அனைத்தும் அவளுக்கு பிடித்தவை. கலவி முடித்த களைப்பில் என் உடல் வியர்த்து வடிந்தது.

“பிரபு…ஏன்டா எப்போ பாத்தாலும் ஏதாது யோசிச்சுட்டே இருக்கிற??!!!”.

நான் ஏதும் பதில் அளிக்காமல் என் Marlboro வை பற்ற வைத்தேன். என் இதழிடை வைத்து கண்களை மூடி மெதுவாக உள்ளிழுத்து கண்ணாடியில் என்னை பார்த்து என்னை ரசிக்கும் அவளையும் பார்த்து மெதுவாக புகையை வெளியே தள்ளினேன்.

“அது ஏன்டா தம் அடிக்கிறவங்க இந்த முதல் puff மட்டும் இவ்ளோ ரசிச்சு இழுக்குறீங்க ??!!”

“முதல் பஃப் மட்டும் இல்ல. கடைசி puff -ம் தான்”

“அதான் ஏன்னு கேக்குறேன்?”

“அதெல்லாம் உனக்கு சொன்னாலும் புரியாதுடி”

“அப்போ புரியுற மாதிரி சொல்லு “

“ப்ச்… எப்படி சொல்றது? தம் அடிக்குறது நமக்குள்ள இப்போ நடந்து முடிஞ்சதே அது மாதிரி. “

“ஓ..! சார் க்கு செக்ஸ் னு வாய்ல வராதோ? சரி சொல்லு . எப்படினு?”

“தம் அடிக்கிற அப்போ அந்த first puff இழுக்கறது, கலவிக்கு முன்னாடி குடுக்குற முதல் முத்தம் மாதிரி. அந்த சிகரெட் நமக்கு என்ன தர போகுது னு தெரியாது. எவ்ளோ நேரம் நீடிக்க போகுதுனு கூட தெரியாது. ஆனா அந்த முதல் முத்தமும் முதல் puff -ம் எப்பவுமே என்ன disappoint பண்ணது இல்ல. கொஞ்சம் கொஞ்சமா அந்த சிகரட் கரைய கரைய இன்னும் கொஞ்சம் நேரம் நீடிக்காதா னு தோணும். அந்த சிகரட் புகை உள்ள போய் சில நேரம் மூச்சு கூட விட முடியாம போகும். ஆனா அதுக்காக நிப்பாட்டவா முடியும் . எல்லாம் முடிஞ்ச பின்ன இதுக்கு மேல போச்சு னா கைய சுட்டுடும்னு நிலை வரப்போ, கலவி முடித்து அந்த மயக்கத்தோட குடுக்குற கடைசி முத்தம் தான் அந்த கடைசி puff!”

அவள் நீல நிற விழி விரிய என்னை பார்த்து கொண்டு இருந்தால்.

“புரிஞ்சதா இல்லையாடி ??!!”

தலை ஆட்டியபடி “ம்ம்ம் …. பாரேன். நீ பேசுறியா இல்ல உன் Marlboro உன்ன பேச வைக்குதா ?? “ என்றாள்.

நான் சின்னதாய் சிரித்தபடி என் கடைசி puff -ஐ உள்ளிழுத்து அதை ashtray -ல் போட்டு நசுக்கி விட்டு அவள் அருகே சென்றேன்.

அவள் கட்டிலில் இருந்தவாரே என்னை அணைத்து “சார் க்கு வேற என்ன எல்லாம் தெரியும் ?!” என்றாள்.

“மனுஷனுக்கு இதயம் இடது புறம் தான இருக்கும்? ஆனா ஒரு நேரம் மட்டும் வலதுபக்கம் துடிக்கிற மாதிரி உணர முடியும். எப்போனு தெரியுமா ?? “ என்றேன்.

அவள் ஒரு புருவம் தூக்கியபடி “எப்போ ??” என்றாள்.

“நான் உன்ன கட்டி அணைச்சு உன் காது மடல்ல முத்தம் கொடுக்கயில உன் இடப்பக்க இதயம் பட படனு துடிச்சதுனா எனக்கு வலப்பக்கம் தான அத உணர முடியும் ?”

“ச்சீ …நாயே!” என்று கூறிவிட்டு என் தலை கோதி என்னை கீழ் இழுத்து என் இதழில் முத்தம் இட்டாள். “இந்த சிகரெட் நாத்தத்துக்கு பழகிக்கணுமா நான் அப்போ??” என்றாள்.

நான் ஏதும் பேசாது அவள் நீல நிற கண்களை பார்த்து கொண்டு இருந்தேன்.அந்த நிறத்தில் நான் கண்களை பார்த்ததே இல்லை.

“மறுபடியும் ஏதோ யோசிக்க ஆரம்பிச்சுட்டியா?? சார் கண்ண மட்டும் பாத்துட்டு இருக்க போறதா உத்தேசமோ? ரெண்டாவது தம் அடிக்க தெம்பு இருக்கா??” என்று கேட்டு விட்டு அவள் தெத்து பல் தெரிய சிரித்துக்கொண்டு இருந்தாள்.

நான் அவள் போர்வையுள் சென்று கட்டி அணைத்து என் இரண்டாவது சிகரட் -ன் முதல் puff -ஐ இழுத்தேன். என் கால் விரல்களை இறுக்கி அழுத்திக்கொண்டு , அந்த சிகரெட்டை மெதுவாக கரைத்துக்கொண்டு இருந்தேன். இருவரும் ஒன்றோடு ஒன்றாக, இரண்டு பக்கமும் இதய துடிப்பை உணர்ந்து கொண்டு கடைசி puff இழுக்க இதழ் பதித்த வேலையில்….

“பிரபு …!!!”

சிகரெட் துண்டு என் கையை சுட்டுவிட மீண்டும் நிகழ்காலம் வந்தடைந்தேன். கையை உதறிவிட்டு பார்த்தேன். அந்த கண்ணாடி கீறிய விரல்கள். அதே ஆளுயர அழுக்கு கண்ணாடி. அதே King Sized Bed. அதே ஜன்னல் வழி வெளிச்சம். சூடு பட்டு என் ஆள்காட்டி விறல் எரிச்சலாய் இருந்தது. இந்த வலி மட்டும் இல்லை என்றால் உயிரோடு இருப்பதே மறந்திடும் போல.

கண்ணாடியில் என்னை நானே பார்த்து கொண்டு இருந்தேன். எனக்கு பிடிக்காத ஒருவன் என் கண் முன்னே தெரிகிறான். எப்போதுமே எனக்கு என்னை பெரிதாய் பிடித்ததில்லை. படுக்கையில் இருந்த Marlboro டப்பாவை எடுத்து என் இரண்டாவது சிகரெட்டை பற்ற வைத்தேன். புகை சூழ்ந்திட கண்ணாடியில் அவன் உருவம் மெதுவாக மறைந்தது.

புகையோடு, வீரா குறில்

Share on