Cubicle Cunt

Vignesh Marimuthu | January 17, 2022

என்னை சுற்றி இங்கு எல்லாமே ஒரு வகையில் cubicle தான்.

ஒரே அளவுல ஒரே உயரத்துல குறுக்க சின்ன சின்ன சுவரு வச்சு பிரிச்சு உக்கார வச்சு இருக்கான் office-ல. அடுத்தவன் பாக்கிற வேலை நம்மள கெடுக்க கூடாதாம். அசதியா இருக்கேனு கைய நீட்ட முயற்சி பண்ணா அடுத்தவன் வாய்ல இடிக்கிற அளவுக்கு தான் தூரம். அப்படி cubicle ல மாட்டிட்டு இருந்தும், தனக்கு புடிச்ச மாதிரி பொம்மை, ஸ்டிக்கர் எல்லாம் ஒட்டி தான் தனியா தெரியணும்னு மெனக்கெடறான். சுத்தி எல்லாரையும் பாத்து அவனை விட நான் நல்லா தான் இருக்கேன்னு அவனே நெனச்சு மார்தட்டிக்குறான். ஆனா எப்படி பாத்தாலும் எல்லாமே ஒரே cubicle தான். Formals போட்டதால, AC ரூம் குடுத்ததால மட்டுமே நான் மத்தவனைவிட ஒசத்தினு நம்ப வைக்குற வேலைய பொறுப்பா பாத்து முடிச்சுட்டு கெளம்புறான் ஒவ்வொருத்தனும். மாலை குறித்த எந்த ஒரு எதிர்பார்ப்பும் பரவசமும் இல்லாம கெளம்புறான்.

Liftல கூட்டமா ஏறுறான். பக்கத்துல யார் நிக்குறாங்கனு பாக்க மாற்றான். அந்த கூட்டத்துல எல்லாரும் ஒரே திசைய நோக்கி நிக்குறாங்க. ஒரே மாதிரி தல குனிஞ்சு. ஒரே மாதிரி rectangle வடிவத்துல இருக்கிற,ரெண்டு மூணு பொத்தான் வச்ச, பின் பக்கம் முன் பக்கம் camera வச்சு இருக்கற cubicle-அ பாத்தபடி. ஒன்னு ரெண்டு பேர் பக்கத்துல இருக்கிறவனோட cubicle வெளிச்சத்த திருட பாக்குறான். எல்லாமே தன்னை போல அசிங்கமானவங்க தான்னு நம்ப காரணம் தேடி திருட பாக்குறான்.

பார்க்கிங் போய் அவன் அவன் ஆசைக்கு ஏத்த மாதிரி வாங்குன வண்டிய தேடுறான். ஆனா அங்க நிக்குற எல்லாமே cubicle தான். நாலு சக்கரமும் நாலு கதவும் வச்சு எல்லாமே ஒரே மாதிரி. ஆனா தான் வச்சு இருக்குற வண்டி தான் வசதியா ஒசத்தியா தெரியணும்னு மெனக்கெடறான். சாவி பொத்தான அழுத்தினா சத்தம் வரணும். டிரைவர் சீட் முன்ன அனுமன் பொம்மை, பின் சீட்ல புலி பொம்மைனு வாங்கி வைக்குறான். தன் பேர தன் வண்டியிலேயே ஒட்டி அழகு பாக்குறான். EMI கட்டி முடிக்கிற வர வண்டி bank பேர்ல இருக்குங்குறத மறக்குறான். கதவை தொறந்து cubicle உள்ள உக்காருறான்.

ஒரே தெசைய பாத்த மாதிரி, இறுக்கமா அடுக்கி வச்ச மாதிரி, எல்லா cubicle-ம் நிக்குது பச்சை விளக்க எதிர் பாத்தபடி. தான் தேடி தேடி சேத்து வச்ச தனக்கு ரொம்ப புடிக்கும்னு நெனச்ச பாட்டெல்லாம் ஒண்ணா cubicle ஸ்பீக்கர்ல ஒளிய விட்டபடி தனி தனியா வெறுமையை நோக்கி உக்காந்து இருக்கான் எல்லாரும். இந்த சின்ன cubicle-அ வாங்க முடியாதவன் பெரிய cubicle ஆன பஸ்ல ஏறுறான். டிக்கெட் எடுத்த கையோட காதுல headset போட்டுட்டு அவனுக்கு புடிச்சு தேடி சேகரிச்ச பாட்ட ஒலிக்கிறான். எவ்வளவு கூட்டத்திலும் தன்னை தனிமைப்படுத்திக்கொள்ள உதவும் டெக்னாலாஜி களை வாங்கி வச்சு இருக்கான். ஜன்னல் வழியா சின்ன cubicle-காரன பாத்து பேராசை படறான். இந்த ரெண்டு பேருமே அவன் தேடி கண்டுபுடிச்ச பாட்ட ரசிக்கல. அந்த இசைல மூழ்கி போகல. அவன் அவன் மண்டைக்குள்ள வேற வேற படம் ஓடுது.

சின்ன சின்னதா ஒரே மாதிரி ஜன்னல் வச்ச, ஒரே தெசைய பாத்து balcony வச்ச, ஒன்றின் மேல் ஒன்றாய் அழகா அடுக்கி வச்சு இருக்கற cubicle-க்கு போறான். எல்லாமே கிட்ட தட்ட ஒரே மாதிரி தான். ஆனா அதுலயும் தன்னோட cubicle தான் ஒசத்தினு காட்டிக்க கட்டில் மெத்த வாங்குறான். யாரையுமே வீட்டுக்கு வா னு கூப்பிட மாற்றான். ஆனா யாரது வந்தா தங்குறதுக்கு இன்னொரு கட்டில் மெத்த வாங்குறான். தன் கையில இருக்குற cubicle வச்சு வசியம் பண்றதுக்கு ஏத்த மாதிரி கலர் கலரா எரியுற விளக்கு வாங்குறான். அங்க இருக்குற எல்லா cubicle லயும் இப்படி ஒருத்தன் வந்து கதவை தொறந்து உள்ள போறான். இருக்குற எல்லா cubicle-லயும் வாசல் கதவு பூட்ட படுது. அது பூட்டியே கெடக்கு. balcony கதவு தொறந்து இருக்கு. எல்லா balcony லயும், எல்லா cubicle காரனும் உக்காந்து இருக்கான். எல்லாரும் ஒரே தெசைய பாத்தபடி. எதிர்க்க இருக்குற ஏதுமற்ற காலி இடத்தை வெறித்து நோக்கிய படி. இங்க இருக்றதுலயே நான் தான் சிறந்த இயற்க்கை ரசிகன்னு அகந்தையோட பாத்துட்டு இருக்காங்க எல்லாரும்.

அதே காலி இடத்தில இன்னும் கொஞ்ச நாள்ல, ஒன்றின் மேல் ஒன்றாய் அடுக்கி வைக்கப்பட்ட, இவர்கள் இருக்கும் இடத்தை நோக்கியபடி balcony வச்ச இன்னொரு கட்டிடம் எழுப்பப்படும். அப்பொழுது வாசல் கதவுடன் சேர்த்து balcony கதவுகளும் மூட படும்.

இப்பேரண்டத்தில் எல்லாமே cubicle தான். மனித உடல் உட்பட. ரெண்டு கை ரெண்டு கால் ஓட எல்லாருமே கிட்டத்தட்ட ஒரே மாதிரி தான் இருக்கான். அப்படி இருந்தும் தான் தான் மத்தவன விட ஒசத்தினு காட்ட நெனைக்கிறான். மீசையை முறுக்குறான். விதம் விதமா சட்ட வாங்கி போடறான். மேல் சாதி கீழ் சாதின்றான். தன் வசம் இருக்குற, தான் அடைபட்டு கெடக்குற மத்த cubicle எல்லாத்தையும் தூக்கி காட்றான். அதை தொலைக்காம இருக்க இன்னும் பெரிய cubicle-அ தேடி தேடி போறான். கடைசில 6க்கு 3னு கணக்குல தோண்டப்படற மண்ணுக்குள்ள தூங்கிடறான்.

இங்கே Cubicle-ஆய் இல்லாமல் தப்பி பிழைத்தவை இந்த பூமியும் பேரண்டமும் தான். அண்ணாந்து பார்க்க முடியாத மேகம் முட்டும் மலைகளும், கண்கள் சுருக்கி நோக்கியும் எல்லை தெரியாத பெருங்கடலும், எவ்வளவு தொலைவு என்று தெரியாத முடிவற்ற இப்பேரண்டத்தின் மூலையயை தேடி தேடி தொலைவோம் வாடா cubicle கூதியே!

Share on